Google One கூடுதல் சேவை விதிமுறைகள்

கடைசியாக மாற்றியது: 11 நவம்பர், 2025 |

Google One பயன்படுத்த, (1) Google சேவை விதிமுறைகள், (2) இந்த Google One கூடுதல் சேவை விதிமுறைகள் (“கூடுதல் விதிமுறைகள்”) ஆகிய இரண்டையும் நீங்கள் ஏற்க வேண்டும். இந்தக் கூடுதல் விதிமுறைகளில் வரையறுக்கப்படாத விதிமுறைகளுக்கான அர்த்தங்கள் Google சேவை விதிமுறைகளில் உள்ளன.

இந்த ஆவணங்களைக் கவனமாகப் படித்துப் பார்க்கவும். இந்த ஆவணங்கள் மொத்தமாக “விதிமுறைகள்” என்றழைக்கப்படும். எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் உங்களிடமிருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதையும் இவை தெளிவுபடுத்துகின்றன.

உங்கள் தகவலை நீங்கள் எப்படி மாற்றலாம், நிர்வகிக்கலாம், ஏற்றலாம், நீக்கலாம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள எங்கள் தனியுரிமைக் கொள்கையையும் படிக்கும்படி பரிந்துரைக்கிறோம்.

1. எங்கள் சேவை

Gmail, Google Photos, Google Drive ஆகியவற்றுக்கு இடையே பகிரப்படும் கட்டணச் சேமிப்பகத்துடன் கூடிய சந்தாத் திட்டங்களை Google One வழங்குகிறது. Google அல்லது மூன்றாம் தரப்பினர் வழங்கும் கூடுதல் பலன்களுடனான சந்தாத் திட்டங்களும் இதில் அடங்கும். மேலும், Google உருவாக்கும் குறிப்பிட்ட சில AI அம்சங்களை அணுகுவதற்கான கட்டணச் சந்தாத் திட்டங்களையும் AI கிரெடிட்டுகளையும் Google One வழங்குகிறது. Google அல்லது மூன்றாம் தரப்பு வழங்கும் கூடுதல் பலன்களை நீங்கள் உபயோகிப்பது அந்தந்தப் பலன்களுக்கான சேவை விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது. சில பலன்கள் சில நாடுகளில் கிடைக்காமல் போகலாம், பிற கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படலாம். கூடுதல் தகவல்களுக்கு Google One உதவி மையத்தைப் பார்க்கவும்.

Google சேவை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள Google நிறுவனத்தால் உங்களுக்கு Google One சேவை வழங்கப்படுகிறது. Google One சந்தாவையோ AI கிரெடிட்டுகளையோ நீங்கள் வாங்கும்போது, விற்பனையாளருடன் உங்களுக்குத் தனி ஒப்பந்தம் உருவாகிறது. விற்பனையாளர் ஒரு Google நிறுவனமாகவோ (2வது பிரிவைப் பார்க்கவும்) மூன்றாம் தரப்பினராகவோ இருக்கலாம். மூன்றாம் தரப்பு அல்லது இணை நிறுவனத்தின் மூலம் Google One சந்தாவை நீங்கள் பெற்றிருந்தால், சந்தா அந்த மூன்றாம் தரப்பு அல்லது இணை நிறுவனத்தின் கூடுதல் விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கக்கூடும்.

AI கிரெடிட்டுகள்

குறிப்பிட்ட AI அம்சங்களுக்கான அணுகலைக் கேட்கவும் அந்தக் கோரிக்கைகளைச் செயல்படுத்தவும் நீங்கள் AI கிரெடிட்டுகளைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட செயலுக்கு (எ.கா. வீடியோவை உருவாக்குதல்) தேவைப்படும் கிரெடிட்டுகளின் எண்ணிக்கை, தொடர்புடைய தயாரிப்பு அல்லது அம்சத்திற்குள்ளேயே உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும். AI அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான கிரெடிட் தொகையை மாற்றும் முழு அதிகாரமும் Googleளுக்கு உள்ளது. Google அவ்வப்போது வழங்கக்கூடிய குறிப்பிட்ட சில AI அம்சங்களை அணுக மட்டுமே AI கிரெடிட்டுகளைப் பயன்படுத்த முடியும்.

நீங்கள் வாங்கும்போது தெரிவிக்கப்பட்டபடி, AI கிரெடிட்டுகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலாவதியாகிவிடும்.

இந்த விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளவை தவிர வேறு உரிமையோ உரிமை நிலையோ AI கிரெடிட்டுகளின் மீது உங்களுக்குக் கிடையாது. AI கிரெடிட்டுகளை வேறு பயனர் அல்லது கணக்கிற்கு விற்கவோ மாற்றவோ கூடாது. AI கிரெடிட்டுகளை விற்கவோ மாற்றவோ முயலவும் கூடாது. AI கிரெடிட்டுகளை நீங்கள் வாங்கும்போது, குறிப்பிட்ட சில AI அம்சங்களைப் பயன்படுத்துவதற்காக முன்கூட்டியே பணம் செலுத்துகிறீர்கள். AI கிரெடிட்டுகள் என்பவை டிஜிட்டல் கரன்சியோ, பத்திரமோ, கமாடிட்டீயோ வேறு வகையான நிதி ஆவணமோ இல்லை, பணமாக அவற்றை ரிடீம் செய்யவும் முடியாது. Google கட்டமைப்பிற்குள் குறிப்பிடப்பட்டுள்ள AI அம்சங்களுக்காக மட்டுமே AI கிரெடிட்டுகளை ரிடீம் செய்யலாம். பொருந்தக்கூடிய பணம் திரும்பப்பெறுதல் கொள்கைகளின்படி, உங்கள் Google One திட்டம் முடியும்போதோ ரத்துசெய்யப்படும்போதோ, பயன்படுத்தப்படாத மீதமுள்ள AI கிரெடிட்டுகளை இழக்கக்கூடும்.

AI கிரெடிட்டுகள் குறித்து இங்கே மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

2. பர்ச்சேஸ் மற்றும் பேமெண்ட்

Google One சந்தாக்கள் காலவரையற்றவை. நீங்கள் குழுவிலகாத வரை ஒவ்வொரு பில்லிங் சுழற்சியின் தொடக்கத்திலும் சந்தாக் காலத்திற்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படும் (உதாரணம்: மாதந்தோறும், வருடந்தோறும் அல்லது வேறொரு கால அளவு).

Google One சந்தா அல்லது AI கிரெடிட்டுகளை நீங்கள் வாங்கும்போது, விற்பனையாளரின் தனி விதிமுறைகள் அந்தப் பர்ச்சேஸிற்குப் பொருந்தும். உதாரணத்திற்கு, Google Play Store மூலம் Google One சந்தாவிற்குப் பதிவுசெய்தாலோ AI கிரெடிட்டுகளை வாங்கினாலோ, Google Play சேவை விதிமுறைகள் பொருந்தும்.

Google Play Store மூலம் Google One சந்தா அல்லது AI கிரெடிட்டுகளை வாங்கினால் உங்களின் விற்பனையாளர்:

  • ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நுகர்வோருக்கு: Google Commerce Limited
  • இந்தியாவில் உள்ள நுகர்வோருக்கு: Google Ireland Limited
  • ஆசியாவின் பிற பகுதிகள் மற்றும் பசிஃபிக்கில் உள்ள நுகர்வோருக்கு: Google Digital Inc.
  • அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு: Google LLC.

மூன்றாம் தரப்பு அல்லது இணை நிறுவனத்தின் மூலம் Google One சந்தாவையோ AI கிரெடிட்டுகளையோ வாங்கினால், அந்த மூன்றாம் தரப்பு அல்லது இணை நிறுவனத்தால் உங்கள் பேமெண்ட் முறையில் கட்டணம் விதிக்கப்படும். ரத்துசெய்தல், பணத்தைத் திரும்பப்பெறுதல் உட்பட உங்கள் பேமெண்ட்டில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை நிர்வகிக்கும் பொறுப்பும் அவர்களையே சாரும்.

உங்கள் Google One சந்தாவிற்கான கட்டணத்தை விற்பனையாளரால் பெற முடியாமல் போனால், விற்பனையாளருடனான உங்கள் பேமெண்ட் முறையை மாற்றும்வரை உங்களால் Google Oneனை அணுக முடியாமல் போகலாம். அந்த அறிவிப்பைப் பெற்ற பிறகு சரியான காலத்திற்குள் பேமெண்ட் முறையை நீங்கள் மாற்றாவிட்டால், Google Oneனுக்கான உங்கள் அணுகலை நாங்கள் ரத்துசெய்யலாம் அல்லது இடைநிறுத்தலாம்.

3. கட்டணம் மற்றும் ஆஃபர்கள்

ஆஃபர்கள். Google One சந்தாவிற்கான கட்டணமற்ற உபயோகத்தை நாங்கள் அவ்வப்போது வழங்கக்கூடும். கட்டணமற்ற உபயோகத்துடன் கூடிய Google One சந்தாவை வாங்கினால், கட்டணமற்ற உபயோகக் காலம் வரை Google Oneனுக்கான அணுகலைப் பெறுவீர்கள். கட்டணமற்ற உபயோகக் காலத்தின் முடிவில், பொருந்தக்கூடிய சட்டத்திற்குட்பட்டு, ஒவ்வொரு பில்லிங் காலத்திலும் தானாகவே கட்டணம் விதிக்கப்படும். சந்தாவை நீங்கள் ரத்துசெய்யும்வரை இது தொடரும். நீங்கள் சரியான பேமெண்ட் முறையை விற்பனையாளருக்கு வழங்கியிருந்தால் மட்டுமே இது நடக்கும். கட்டணங்களைத் தவிர்க்க, கட்டணமற்ற உபயோகக் காலம் முடிவதற்கு முன் விற்பனையாளருடனான உங்கள் சந்தாவை நீங்கள் ரத்துசெய்ய வேண்டும். Google One சந்தாக்களில் நாங்கள் அவ்வப்போது தள்ளுபடிகளையும் வழங்கக்கூடும். தகுதிநிலை நிபந்தனைகள் உள்ளிட்ட கூடுதல் விதிமுறைகளும் நிபந்தனைகளும் இந்த ஆஃபர்களுக்குப் பொருந்தக்கூடும். நீங்கள் ரிடீம் செய்வதற்கு அல்லது வாங்குவதற்கு முன்னரே அத்தகைய கூடுதல் விதிமுறைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும். பொருந்தக்கூடிய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் ஆஃபர்கள் செல்லுபடியாகாது.

கட்டணங்களில் மாற்றம். Google One சந்தாக்கள் அல்லது AI கிரெடிட்டுகளுக்கான கட்டணங்களை நாங்கள் அவ்வப்போது மாற்றக்கூடும். பொருந்தக்கூடிய வரிகள், விளம்பரச் சலுகைகள், Google One ஆகியவற்றில் நிகழும் மாற்றங்கள், பணவீக்கம், மாறும் பிசினஸ் தேவைகள் போன்ற காரணங்களுக்காக நாங்கள் கட்டணங்களை மாற்றலாம். Google One சந்தாக் கட்டணங்கள் மாறினால், உங்களின் நடப்பு பில்லிங் காலம் முடிந்த பிறகு மற்றும் அது குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகு கட்ட வேண்டிய அடுத்த பேமெண்ட்டில் மாற்றங்கள் செயல்படுத்தப்படும். கட்டணம் விதிக்கப்படுவதற்குக் குறைந்தது 30 நாட்களுக்கு முன் கட்டண உயர்வைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்போம். 30 நாட்களுக்குக் குறைவான கால இடைவெளியில் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டால் நிலுவையிலுள்ள அடுத்த பேமெண்ட்டிற்குப் பிறகு வரும் பேமெண்ட் வரை மாற்றம் நடைமுறைக்கு வராது. புதிய கட்டணத்தில் Google One சந்தாவைத் தொடர விரும்பவில்லை என்றால், இந்த விதிமுறைகளின் ‘ரத்துசெய்தல்கள்’ பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி சந்தாவை நீங்கள் ரத்துசெய்யலாம். நடப்பு பில்லிங் காலம் முடிவதற்கு முன் எங்களுக்குத் தெரியப்படுத்தினால், மேற்கொண்டு சந்தா விதிக்கப்படாது. கட்டண உயர்விற்கு உங்கள் ஒப்புதல் தேவைப்படும் பட்சத்தில், புதிய கட்டணத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் உங்கள் சந்தா ரத்துசெய்யப்படும்.

4. ரத்துசெய்தல்களும் பணத்தைத் திரும்பப்பெறுதலும்

ரத்துசெய்தல்களும் விலகல்களும். சந்தாவை ரத்துசெய்தால், உடனடியாகச் செயல்படுத்தப்படும் வகையில் ரத்துசெய்யும் உரிமையோ உதவி மையத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி பிற ரத்துசெய்தல்/விலகல் உரிமைகளோ உங்களுக்கு இருந்தாலே தவிர, உங்கள் நடப்புச் சந்தாவின் மீதமுள்ள காலத்திற்கு Google One அணுகல் உங்களுக்கு இருக்கும். விலகுவதற்கான உரிமை உங்களுக்கு இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால் விலகுவதற்கான உங்கள் முடிவை ஒரு தெளிவான அறிக்கையின் மூலம், உங்களுக்கு விற்பனை செய்த நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும். விலகுவதற்கான கால அவகாசத்தின்போது நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கினால், ஒப்பந்தத்திலிருந்து நீங்கள் விலகுவதை விற்பனையாளருக்குத் தெரிவிக்கும் வரை வழங்கப்பட்ட சேவைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட ஒரு தொகையை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கலாம்.

சேவை நீக்கம் மூலம் Google Oneனை நீக்கினால், Google One சேவைகளுக்கான அணுகலை நீங்கள் உடனடியாக இழக்கக்கூடும் என்பதை ஏற்கிறீர்கள். உங்கள் பில்லிங் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு Google One சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் Google Oneனை நீக்குவதற்குப் பதிலாக உங்கள் சந்தாவை ரத்துசெய்யவும்.

பணத்தைத் திரும்பப்பெறுதல். நீங்கள் Google One சந்தாவையோ AI கிரெடிட்டுகளையோ வாங்கியிருந்தால், பணம் திரும்பப்பெறுதல் கொள்கை பொருந்தும். பணத்தைத் திரும்பப்பெற, உங்களுக்கு விற்பனை செய்த நிறுவனத்தை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும். பொருந்தக்கூடிய சட்டத்தின்படி உங்களுக்கு நுகர்வோர் உரிமைகள் இருக்கக்கூடும், அவற்றை ஒப்பந்தத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. இந்த விதிமுறைகள் அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தாது.

5. வாடிக்கையாளர் உதவி சேவைகள்

குறிப்பிட்ட Google சேவைகளின் வாடிக்கையாளர் உதவி சேவைகளுக்கான அணுகல் Google Oneனில் சேர்க்கப்பட்டிருக்கலாம். வாடிக்கையாளர் உதவி சேவைகளால் உங்கள் சிக்கலைத் தீர்க்க உதவ முடியாவிட்டால், தொடர்புடைய Google சேவைக்கான வாடிக்கையாளர் உதவி சேவைகளுக்கு உங்கள் கோரிக்கையை நாங்கள் மாற்றலாம் அல்லது உங்களை அங்கு திருப்பிவிடலாம். உங்களுடைய Google One சந்தா ரத்து செய்யப்பட்டாலோ இடைநீக்கப்பட்டாலோ, வாடிக்கையாளர் உதவி சேவைகள் இன்னும் தீர்வுகாணாத சிக்கல்களும் இடைநீக்கப்படலாம். உங்கள் சந்தாவை மீண்டும் தொடங்கிய பிறகு புதிதாக ஒரு கோரிக்கையை நீங்கள் தொடங்க வேண்டியதிருக்கலாம். வாடிக்கையாளர் உதவி சேவைகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு எங்கள் உதவி மையத்தைப் பார்க்கவும்.

6. குடும்பத்தில் பகிர்தல்

குறிப்பிட்ட சில பலன்களை உங்கள் குடும்பக் குழுவுடன் பகிர Google One சந்தா அனுமதிக்கலாம் (“குடும்பத்தில் பகிர்தல்”). ஏதேனும் பலன்களை உங்கள் குடும்பக் குழுவுடன் பகிர விரும்பவில்லை என்றால், Google Oneனுக்கான ‘குடும்பத்தில் பகிர்தல்’ அம்சத்தை நீங்கள் ஆஃப் செய்ய வேண்டும் அல்லது உங்கள் குடும்பக் குழுவை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும். Google One சந்தாவில், Google One திட்ட நிர்வாகிகள் மட்டுமே குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்கலாம், குடும்பத்தில் பகிர்தல் அம்சத்தை ஆன்/ஆஃப் செய்யலாம். குடும்பத்தில் பகிர்தல் அம்சம் குறித்த கூடுதல் தகவலுக்கு எங்கள் உதவி மையத்தைப் பார்க்கவும்.

நீங்கள் Google Oneனில் ஒரு குடும்பக் குழு உறுப்பினர் என்றால், உங்கள் குடும்பக் குழுவில் உள்ளவர்கள் உங்களைப் பற்றிய சில தகவல்களைப் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, Google Oneனில் 'குடும்பத்தில் பகிர்தல்' அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும் குடும்பக் குழுவில் நீங்கள் சேர்ந்தால், அந்தக் குடும்பக் குழுவில் உள்ள பிற உறுப்பினர்களும் அதில் சேர அழைக்கப்படுபவர்களும் உங்கள் பெயர், படம், மின்னஞ்சல் முகவரி, நீங்கள் காப்புப் பிரதி எடுத்திருக்கும் சாதனங்கள், உபயோகித்த AI கிரெடிட்டுகளின் எண்ணிக்கை, நீங்கள் பயன்படுத்தும் சேமிப்பிடம் போன்றவற்றைப் பார்க்கலாம். Google One சந்தாவில் சேர்க்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட கூடுதல் பலன்களைக் குடும்ப உறுப்பினர் எவரேனும் ரிடீம் செய்துள்ளாரா என்பதையும் குடும்பக் குழு உறுப்பினர்கள் பார்க்கக்கூடும்.

உங்கள் குடும்பக் குழுவில் நீங்கள் Google One திட்ட நிர்வாகியாக இருக்கும்போது குடும்பத்தில் பகிர்தல் அம்சத்தை ஆஃப் செய்தாலோ உங்கள் குடும்பக் குழுவிலிருந்து வெளியேறினாலோ, உங்கள் குடும்பக் குழுவில் உள்ள பிற உறுப்பினர்கள் Google One சந்தாவிற்கான அணுகலை இழப்பார்கள். குடும்பத்தில் பகிர்தல் அம்சத்தின் மூலம் Google Oneனுக்கான அணுகலை உங்கள் Google One திட்ட நிர்வாகி உங்களுக்கு வழங்கியிருக்கும் பட்சத்தில், குடும்பக் குழுவில் இருந்து நீங்கள் வெளியேறினாலோ, குடும்பத்தில் பகிர்தல் அம்சத்தை உங்கள் Google One திட்ட நிர்வாகி ஆஃப் செய்தாலோ, குடும்பக் குழுவில் இருந்து அவர் வெளியேறினாலோ, Google One சேவைக்கான அணுகலை நீங்கள் இழப்பீர்கள்.

7. மொபைல் காப்புப் பிரதி மற்றும் மீட்டெடுத்தல்

தகுதிபெறும் மொபைல் சாதனங்களுக்கான மேம்பட்ட தரவுக் காப்புப் பிரதி மற்றும் மீட்டெடுத்தல் செயல்பாடு (“காப்புப் பிரதி மற்றும் மீட்டெடுத்தல்”) Google Oneனில் சேர்க்கப்பட்டிருக்கலாம். காப்புப் பிரதி மற்றும் மீட்டெடுத்தல் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு Google Photos போன்ற கூடுதல் ஆப்ஸை நிறுவி அவற்றைச் செயல்படுத்த வேண்டியிருக்கலாம். காப்புப் பிரதி மற்றும் மீட்டெடுத்தல் விருப்பங்களை Google One ஆப்ஸில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றலாம். உங்கள் Google One சந்தா இடைநிறுத்தப்பட்டாலோ ரத்துசெய்யப்பட்டாலோ, காப்புப் பிரதி மற்றும் மீட்டெடுத்தல் அம்சத்தின் மூலம் சேமிக்கப்பட்ட தரவுக்கான அணுகலை Android காப்புப் பிரதிக் கொள்கைகளின்படி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் இழக்கக்கூடும்.